ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமண்ய புஜங்கம் திருச்செந்தூர் முருகன் மேல் பாடப்பெற்றது. தினமும் பாடுங்கள். எந்த நோயும் வாராது. வந்த நோய் ஓடிவிடும்.இது அதன் தமிழாக்கம்.

padal nalla irukka?

Sunday, November 29, 2009

Subramania Pujangam

ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்

காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன்
சூலமொடு ஐம்முகத்தோன் சுரனோடு நான்முகனும்
சீலமிகு திருமாலும் தேடி வரும் கரிமுகத்தோன்
மூல வினை மலை நீக்கி முழு ச்செல்வமருள் புரிவான்!

கவியறியேன் வசனமோ கண்டறியேன் யென்
செவியறியா தொலியெதையும் செப்பியுமறியேன் பொருள்
புவி புகழும் ஆறுமுகா உன் புனித முகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து

உலகமெலாம் காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே!
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம் வாழும் தேவே!
பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்தி மிகு அந்தணர் தம்
குலதேவா! வேதத்தின் தத்துவமே! கோல மயில் வாகனனே! பணிகின்றேன்!

செந்திற்கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவி யெனும் வரையிலாக்கடலினையே
கந்தன் திருவருளால் கடந்திடுவர் பராசக்தி
மைந்தன் பதம் பணிவோம் மால் மருகன் சொன்னபடி

ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலையும்
ஆங்கென் அடி பணிந்து அமர்ந்திடுமாம் விந்தை போல
ஏங்கும் கவலையோடு என் முன்னே வந்திட்டால்
நீங்கும் தீங்கென்பான் நெஞ்சிலுறைச் செந்தூரான்

எந்தன் மலை வந்தவர்கள் எந்தை மலை போனவர்கள்
கந்த மலை வந்தவர்கள் கயிலைக்கு வந்தோ ரென்பான்
சிந்தும் ஒளி மதி முகத்தோன் எந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம் வாழ்க!

எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்க வல்ல
சித்தர் வாழ் கந்த மலை சீரலை வாய் ஓரத்தினில்
புத்தொளி யாய் க்குகையினிலே புனித குகன் வீற்றுள்ளான்
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்


மாணிக்க க்கட்டிலென்ன மாசறு பொற்கொயிலென்ன
நாணக்கண்டிடலாம் நாற்கோடி ரவி ஒளியும்
வானத்து தேவ தேவன் வரம் வேண்ட த்தான் தருவான்
காணக்கண் குளிரும் கார்த்திகேயன் தாள் பணிவோம்


செந்நிறப் பாத மலர் சிந்தும் தேனமுத மலர்
இன்னொலி பாத ரசம் இன்ப மயமாக்கும் மனம்
உன்னினைவில் நினைவாக உலவி வரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே

தங்க மய ஒளி வீசும் தக தகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரை ஞாணும் ஒட்டியாணம்
கிண்கிணி க்கும் சலங்கை ஒலி கிறங்க வைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளி வடிவாம் எழில் முருகன் தாள் பணிவோம்


மங்கை குறவள்ளி தனை மால் மருகனணைத்ததுமே
கொங்கை யழகிட்ட குங்குமும் மார்புறைந்தே
அங்கும் செவ்வொளி வீச அன்பர் தமை யாட்கொள்வான்
தங்க நிற மார்புடையோன் தாரகனை க்கொன்றவனாம்


சூரபதுமனை க்கொன்றே சூரன் பகை தான் வென்றே
தூர யமனை ஓட்டி துண்டித்த யானை தந்தம்
பாருலகம் படைத்தவனை பணிய வைத்த வேலவனைச்
சேரும் உயிர் காக்க ச்செந்தூரான் கரம் துணையே

பனிக்கால ச்சந்திரனும் பருவமெல்லாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழு மதியின் தண்ணொளி போல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றம் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம் வந்த கந்தனுக்கு நிகராமோ

அன்னப்பறவைகளோ ஆறுமுகா உன் சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம் வருமே
வண்ண மலர்த்தாமரையில் வண்டுலவும் விழி யழகை
என்ன சொல்ல சிவ பாலா! எழில் தாமரை முகனே!

கண்விழிகள் பன்னிரெண்டும் காது வரை நீண்டிருக்கும்
நின் கருணை ப்பெரு வெள்ள நீர்த்துளி தான் கிட்டாதோ!
அன்பரென த்தொழு வோர்க்கு அருள் புரிந்தால் குறைந்திடுமோ!
உன் பார்வை படுமாயின் உய்வேனே உமை பாலா

முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
"என்னின்றுதித்த மைந்தா என்றென்றும் வாழ்க"வென
சொன்னதுமே ஆறுமுறை சுக வாழ்வை நிலையாக்கும்
மண்ணுலகின் சுமை தாங்கும் மணிக்கிரீடசிரம் பணிவோம்

மாலை மணியணிகள் மார்பில் அசைந்தாட
கோலமிடு காதணியும் குண்டலமும் தோள் வளையும்
மேலிடை ப்பட்டாடை மேன்மை யொளி வீசிடுமே
வேலன் புரமெரித்தோன் வேத மைந்தா நீ வருக

"இங்கு வா " என்றதுமே இளைய த்திருக்குமரன்
சங்கரி தன் மடியிலிருந்து சங்கரன் கரம் தழுவும்
தங்க நிற இளம் மேனி தவழும் குழந்தை யவன்
திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்

குமரா! ஈசன் திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அமரர் பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா!
சமரில் தாரகனை க்கொன்றவனே! சரவண பவனே! வள்ளி மணாளா!
உமையாள் உருவாம் வேல் முருகா! உம்மை ப்பணிந்தோம் காத்திடுவாய்!

புலனடங்கி நினைவிழந்து பொறி கலங்கி கபமடைக்கப்
பலம் நலிந்து செயல் மறந்து பயம் மிகுந்து உடல் நடுங்க
நலம் நசிந்து உயிர் மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள் வேறு உதவிடுமோ உன்னையல்லால்


"வெட்டு", " பிள", "பொசுக்" கென்று வெஞ்சினமாய் யமதூதர்
திட்ட வரும் கால மதில் திரு மயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்ட வந்து "அஞ்சேல்" எனத்
தொட்டு க்காத்தருள த்தோன்றிடு வாய் வேலவனே!

உனைப் பணிந்து கேட்கின்றேன் "ஓம் முருகா" என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணை புரிவாய் அப்போது தொழுதிடுவேன் இப்போதே!

தாரகன் சிங்கமுகன் தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் சூழும் அண்டமாயிரத்தை
வீரமொடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன் நோய் நீக்கி ப்பார்த்தருள் வாய் வேலவனே!

உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமென்னும்
சுமையால் தளர்ந்தவன் நான் சுந்தர வடிவேல் கொண்டு
இமையா அமரர் தேவா! ஏழை க்கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன் உளநோய் நீக்கிடு வாய்!

காசம் காயம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலென்னும்
நாசம் செய்யும் பெரு நோயும் நலிய வைக்கும் பைசாசம்
வாசம் செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலா உன்
பூசு மலைத்திரு நீற்றால் போக்கிடுவாய் தீவினையாம்

கந்தனை க்காணவே கண்கள், கரங்களும் அவன் பணிக்கே
செந்தில் முருகன் புகழ் செவி படைத்த பயனாகும்
சந்ததமும் அவன் சரிதம் சந்தமொடு வாய்பாடும்
சிந்தனையும் உடல் வாழ்வும் சீரலை வாய் கந்தனுக்கே!

பக்தி நெறி மனிதர்க்கும் பர தத்துவ முனிவர்க்கும்
முக்தி யளித்திடுவர் மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையுமறிந்திடாத எளிய நிலை ப்பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியே தையுமறியேனே!

மனைவியொடு மக்களும் மனையில் வாழும் பசுக்களும்
மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும் நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீங்க வேள்வியை விதிப்படியே நடத்தருள்வீர்!

நெடிய மலை க்கிரௌஞ்ச மதை நினைத்ததுமே வேல் கொண்டே
பொடி செய்த வேலவனே! புண்படுத்தும் நோய்களையும்
கொடிய விட ப்பிராணி யோடு கொத்த வரும் பறவையினம்
கடுதியோட ச்செய்திடுவீர் கைகள் தாங்கும் வேலதனால்

தன் மகன் செய்த பிழை தந்தை தாய் மன்னியரோ?
உன் மகன் நானன்றோ? உலகத்தின் தந்தையே நீ!
தென் பரம் கிரி தேவா! தேவா சேனாதிபதியே!
என் பிழை மலை யெனினும் எளியேனை ப்பொறுத்தருள் வாய்!

கந்தா உன் மயில் போற்றி! கடம்பா உன் வேல் போற்றி!
சிவன் மைந்தா சேவல் போற்றி! மறியாடும் தான் போற்றி!
சிந்தா குலத்தீர் செந்தூரா! சிந்தும் சேவடியும் போற்றி!
வந்தே வரமருள் வாய்! வணக்கம்! வணக்கமைய்யா!

வெற்றி தரும் இன்ப வாடி வேலனே! சிவன் மகனே!
வெற்றியின் திரு உருவே! விளங்கும் புகழுடையோய்!
வெற்றி கொண்ட திருக்கடலே! வெள்ளப்பெருக்கினைப்போல்
வெற்றி புகழ் இன்பமெல்லாம் வேண்டுவோர்க்கருளிடுவீர்!

கந்தனின் புஜங்கமிதை கவி பாடி பக்தியோடு
வந்தித்து வழி பட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்
சிந்தை க்குகந்த இல்லாள், செல்வம் நன் மக்களுடன்
தந்திடும் பேரின்ப நிலை தரணி புகழ் குகனருளே!

3 comments:

  1. இது ஆதிசங்கரர் திருச்செந்தூரில் அருளியது. அவசியம் படித்து மகிழ்ந்து பலனும் பெறுங்கள்.
    அன்பன் ந.மோகனசுந்தரம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி................ நான் தேடிய பேரு " நிதி " இங்கே கண்டு கொண்டேன் இதனை ஒலி நாட வில் கேக்க ஏதேனும் லிங்க் உள்ளதா.

    இப்படிக்கு ,
    முருக பக்தன் "முத்துகுமார் "

    ReplyDelete
  3. Thank you for posting this wonderful slogam

    ReplyDelete